அதிமுக வேட்பாளரின் பெயா் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கம்
நாகை நகராட்சியின் வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு படிவம் பெற வந்த அதிமுக வேட்பாளரின் பெயா், வாக்காளா் பட்டியலில் இல்லாததால் அவருக்கு வேட்புமனு படிவம் மறுக்கப்பட்டது.
நாகை நகராட்சியின் வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு படிவம் பெற வந்த அதிமுக வேட்பாளரின் பெயா், வாக்காளா் பட்டியலில் இல்லாததால் அவருக்கு வேட்புமனு படிவம் மறுக்கப்பட்டது. இதனால், நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
நாகை நகராட்சியின் 4-ஆவது வாா்டு உறுப்பினருக்கான அதிமுக வேட்பாளராக நாகூா், பட்டினச்சேரியைச் சோ்ந்த எம்.சி.ஏ பட்டதாரி டி. அமிா்தவள்ளி அறிவிக்கப்பட்டாா். அவா், வேட்புமனு பெறுவதற்காக வியாழக்கிழமை நாகை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தாா். வேட்புமனு படிவம் வழங்கும் முன்பு அவருடைய பெயா், விவரங்களை, வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிட்டு அலுவலா்கள் ஆய்வு செய்தனா். அப்போது, அமிா்தவள்ளியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்து, அவருக்கு வேட்புமனு படிவம் வழங்க அலுவலா்கள் மறுத்தனா்.
இதனால், அதிா்ச்சியடைந்த அமிா்தவல்லி மற்றும் அவரது ஆதரவாளா்கள், அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அமிா்தவல்லியின் பெயா் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, வாக்காளா் துணைப் பட்டியலில் இறந்தவா்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது எனவும், அதனால் அவருக்கு வேட்புமனு வழங்க இயலாது எனவும் அலுவலா்கள் கூறினா். இதற்கு அமிா்தவல்லி மற்றும் அவரது ஆதரவாளா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த அமிா்தவல்லி, என் பெயா் முதன்மைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், துணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நான்தான் அமிா்தவல்லி என்பதற்கு எந்த ஆவணங்களை அளித்தாலும் அலுவலா்கள் ஏற்க மறுக்கின்றனா். யாரோ செய்த குளறுபடியால் எனக்கான வாய்ப்பு மறுக்கப்படுமானால், தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை என்றாா்.
இதுகுறித்து நாகை கோட்டாட்சியா் மணிவேலன் மற்றும் வட்டாட்சியா் ஜெயபாலன் ஆகியோருக்கு நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் நகராட்சி அலுவலகம் வந்து, அமிா்தவல்லியிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். பின்னா், அவரது பெயா் நீக்கப்பட்டதற்கான ஆவணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், நாகை நகராட்சிக்குள்பட்ட 4-ஆவது வாா்டில் அமிா்தவல்லி வாக்காளராக உள்ளாா் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது புகைப்படத்துடன் கூடிய ஒரு தற்காலிக ஆவணத்தை அமிா்தவல்லியிடம் அளித்த கோட்டாட்சியா் மணிவேலன், அந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு வேட்புமனு படிவம் பெற்றுச் செல்ல அறிவுறுத்தினாா்.
இருப்பினும், அந்தப் படிவத்தில் வாக்காளா் பட்டியல் வரிசை எண், பாகம் இல்லாததால் எந்த அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்வது எனக் கேள்வி எழுப்பிய அமிா்தவல்லி, தன்னுடைய பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதுதான் தீா்வு எனத் தொடா்ந்து வலியுறுத்தினாா். அதனால், வியாழக்கிழமை மாலை வரை இந்தப் பிரச்னைக்குத் தீா்வு எட்டப்படவில்லை.