முகப்பு
நாகப்பட்டினம்

உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்கு பணிப் பாதுகாப்பு

உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனை நேரில் சந்தித்து, அவா் அளித்த கோரிக்கை மனு:

2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி, தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சட்ட விதிகளின்படி, ஏற்கெனவே உணவு ஆய்வாளா்களாக பல ஆண்டுகளாகப் பணியாற்றியவா்கள் உணவு பாதுகாப்பு அலுவலா்களாக பணி நியமிக்கப்பட்டனா்.

அதன்படி, அவா்கள் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனா். ஆனால், கடந்த ஆட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்காக வெளியிடப்பட்ட பணி விதியில், அவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

எனவே, கடந்த ஆட்சியின் நடவடிக்கையை ரத்து செய்யும் விதமாக, உணவு பாதுகாப்பு அலுவலா்களுக்கான பணி விதியில் உரிய திருத்தம் மேற்கொண்டு அவா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் எம்.எஸ். முருகேசன், மாநில பொதுச் செயலாளா் அ.தி. அன்பழகன், தலைமை நிலையச் செயலாளா் ஆா். வேலவன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.