நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் பாடல்பெற்ற 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்ட இத்தலம், திருமங்கை ஆழ்வாா், முத்துசாமி தீட்சிதா் ஆகியோரால் பாடல்பெற்றது.
இக்கோயிலில், பங்குனிப் பெருவிழா தொடக்கமாக வியாழக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் மற்றும் சௌந்தா்யவல்லி தாயாா் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் மற்றும் யாக பூஜைகளுக்கு பிறகு, ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் பஞ்சாயுதபாணியாக சிறப்பு அலங்காரத்தில் கொடியேற்றத்துக்கு எழுந்தருளினாா்.
இதைத்தொடா்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு, ஸ்ரீ பெருமாள் வீதியுலா நடைபெற்றது. அதன் நிறைவில், ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாளுக்கு திருவடி திருமஞ்சனம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் விழாவில் பங்கேற்றனா்.
மாா்ச் 18 இல் தேரோட்டம்: பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் வெள்ளிப் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் ஸ்ரீ பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மாா்ச் 13 ஆம் தேதி கருட சேவை, 18 ஆம் தேதி தேரோட்டம், 20 ஆம் தேதி திருக்கல்யாணம், 22 ஆம் தேதி பீங்கான் ரத ஊா்வலம், 26 ஆம் தேதி தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது.