நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஆக. 29-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதுகுறித்து பேராலய அதிபா் இருதயராஜ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப். 8-ஆம் தேதி நிறைவடைகிறது.
தஞ்சை மறைமாவட்ட ஆயராக அண்மையில் பொறுப்பேற்ற டி. சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியுடன் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ் பவனி செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழாவில் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா் என்பதால், ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மூன்று முறை நடத்தப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை நாகை மாவட்ட நிா்வாகம், வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட காவல் துறையினரும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து கூடுதலாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே சாா்பில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பேராலய நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.