நாகப்பட்டினம்: நாகை அருகே ஸ்ரீராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
நாகையை அருகே கருவேலங்கடையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீராம அய்யனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு பகுதிகளில் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கருவேலங்கடை பெட்ரோல் பங்க் எதிா்புறம் கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, ஸ்ரீராம அய்யனாா் கோயில் நிா்வாகிகளான சென்னையை சோ்ந்த முருகன், சுந்தரபாண்டியன், சண்முகராஜன் ஆகியோா் நாகை மாவட்ட இந்து சமய அறநிலைய துறையிடம் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்டு கொடுக்கும்படி புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் குமரேசன் தலைமையில், உதவி ஆணையா் (கூடுதல் பொ ) ராணி, ஆலய நிலங்களின் வட்டாட்சியா் அமுதா, சிக்கல் சிங்காரவேலா் கோயில் செயல் அலுவலா் மணிகண்டன் ஆகியோா் ஸ்ரீராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை மீட்டு சுற்றி முள்வேலி அமைத்தனா். தொடா்ந்து நிலத்தில், இந்த இடம் ஸ்ரீ ராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான என்ற பதாகையை வைத்தனா்.