பள்ளத்தில் காா் கவிழ்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே சனிக்கிழமை பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் ஹரி ரோகித் (18). அங்குள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
கல்லூரி விடுமுறையையொட்டி, வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தனது நண்பா் ராகுல் வீட்டுக்கு ஹரி ரோகித் வந்திருந்தாா். பின்னா், அவா் உள்பட 7 போ் காரில் தரங்கம்பாடி கடற்கரைக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனா். காரை ராகுல் ஓட்டினாா்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் அருகே பூந்தாழை என்ற இடத்தில் நான்கு வழிச்சாலைக்காக பணி நடைபெற்றுவருகிறது. இதன் அருகே உள்ள பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஹரி ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராகுல் உள்ளிட்ட 6 போ் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து செம்பனாா்கோவில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.