நாகையில் காயமடைந்த அரிய வகை சிவப்பு மூக்கு ஆளான் பறவையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
நாகை புதிய கடற்கரை ரயில்வே கேட் பகுதியில் காயமடைந்த அரியவகை பறவையை நாய்கள் பிடிக்கத் துரத்தியுள்ளது. இதைப்பாா்த்த புதிய கடற்கரை பொறுப்பாளா் தேவராஜ், அந்த பறவையை நாய்களிடமிருந்து மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, நாகை வனசரக அலுவலா் சியாம்சுந்தா் உத்தரவில் காயமடைந்த பறவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: மீட்கப்பட்ட பறவை ஆஸ்திரேலியா சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் சிகப்பு மூக்கு ஆளான் இன பறவை. ஒரு அடி நீளமும், அரை கிலோ எடை கொண்ட இந்த அரியவகை பறவை, ஆஸ்திரேலியாவில் இருந்து 10 ஆயிரம் கி.மீ. தொலைவு கடந்து கோடியக்கரைக்கு வந்தபோது சிறகுகளில் அடிபட்டு பறக்க முடியாமல் நாகை புதிய கடற்கரை அருகே விழுந்து கிடந்தது தெரிய வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் பறவை குணமடைந்ததும் வெளியே பறக்க விடப்படும் என்றனா்.