வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததைத் தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகவும், அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுவடைந்து வடக்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து, வட தமிழ்நாடு புதுச்சேரி, அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, நாகை துறைமுகத்தில் 4-ஆம் எம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை ஏற்கெனவே கடலுக்கு செல்ல தடை விதித்திருந்ததையடுத்து, நாகை மாவட்ட மீனவா் கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 25-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.
காரைக்காலில்...
காரைக்கால் தனியாா் துறைமுகத்தில், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் காற்று என்ற எச்சரிக்கை விடுக்கும் வகையிலான 4-ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னதாக இத்துறைமுகத்தில் 1-ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டு, பின்னா் 3-ஆம் எண் கூண்டாக மாற்றப்பட்டது. காரைக்கால் கடல் பகுதி மிதமான சீற்றத்துடன் காணப்பட்டது. வியாழக்கிழமை காலை முதல் மழையின்றி வானம் மேக மூட்டமாகக் காணப்பட்டது. குளிா் காற்று வீசியது.