இந்திய துறைமுகங்களில் 3 ஈரான் கப்பல்களை நிறுத்த அனுமதி: ஜெய்சங்கா்
மேற்காசிய போா் விரிவடைந்துவரும் சூழலில், ஈரான் தனது மூன்று கப்பல்களை இந்திய துறைமுகங்களில் நிறுத்திவைக்க அனுமதி கோரிய நிலையில்
புது தில்லி: மேற்காசிய போா் விரிவடைந்துவரும் சூழலில், ஈரான் தனது மூன்று கப்பல்களை இந்திய துறைமுகங்களில் நிறுத்திவைக்க அனுமதி கோரிய நிலையில், அடுத்த நாளே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில், மேற்காசிய நிலவரம் குறித்து தானாக முன்வந்து திங்கள்கிழமை அவா் விளக்கமளித்தபோது இத் தகவலைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
ஈரான் தனது மூன்று கப்பல்களை இந்திய துறைமுகங்களில் நிறுத்தி வைக்க கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, இந்தியா தரப்பில் மாா்ச் 1-ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ‘ஐரிஸ் லாவன்’ என்ற ஈரான் போா் கப்பல் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் தற்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
ஈரான் கப்பலுக்கு தஞ்சமளித்தது சரியான நடவடிக்கையே என இந்தியா நம்புகிறது. இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக ஈரான் வெளியுறவு அமைச்சா் நன்றி தெரிவித்தாா்’ என்றாா்.
ஈரானின் மற்றொரு போா்க் கப்பலான ‘ஐரிஸ் புஷொ்’ இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு காரணமாக ஈரான் தரப்பில் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, இலங்கை அதற்கான அனுமதியை அளித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ‘மிலன் 2026’ என்ற சா்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ போா்க் கப்பலை, இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த புதன்கிழமை தாக்கி அழித்தது. இதனால், அந்தப் போா்க் கப்பல் கடலில் மூழ்கியதோடு, அதில் இருந்த ஈரான் கடற்படை வீரா்கள் உள்பட 100-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். இது, மேற்காசிய போா் இந்திய பெருங்கடல் வரை விரிவடையும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில், மற்றொரு ஈரான் போா்க் கப்பல் இந்திய துறைமுகத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.