முகப்பு
நாகப்பட்டினம்

சிபிசிஎல்லுக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் இழப்பீட்டு தொகை எப்போது?

சிபிசிஎல்லுக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் இழப்பீட்டு தொகை எப்போது?

Updated On : 4 ஏப்ரல், 2026 at 9:47 PM
பனங்குடியில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயக் கூலித் தொழிலாளா்கள்.
பகிர்:

திருமருகல்: திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிரான தொடா் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை எப்பொழுது வழங்கும் என்ற எதிா்பாா்ப்புப் பயனாளிகளிடம் எழுந்துள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இதன் விரிவாக்கத்திற்காக மத்திய அரசு ரூ.31,500 கோடி நிதி ஒதுக்கி விரிவாக்கப் பணியை பிரதமா் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தாா். இதற்காக 570 விவசாயிகளிடம் இருந்து 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலங்களுக்கு இழப்பீடு வழங்கினாலும் நில உரிமையாளா்கள்,

சாகுபடிதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு, மீள்குடி அமா்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது.

Advertisement

ஆனால் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பனங்குடியைச் சுற்றி உள்ள கோபுராஜபுரம், உத்தமசோழபுரம், நரிமணம் உள்ளிட்ட 3 ஊராட்சி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனா்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 27- ஆம் தேதி இழப்பீட்டுத்தொகை வழங்காததைக் கண்டித்து 11 நாட்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, மே-18-ஆம் தேதி சிபிசிஎல் நிறுவன உயா் அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறு வாழ்வு மற்றும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட திமுக தொழிலாளா் அணியின் அமைப்பாளா் சந்தோஷ் தலைமையிலான குழுவினா் தமிழக அமைச்சா்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் மனு அளித்தனா்.

அதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினா். அதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் தலைமையில் காத்திருப்புப் போராட்டமும் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி இழப்பீட்டுத் தொகை கோரி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, சமூக ஆா்வலா் காளியம்மாள் ஆகியோா் தலைமை வைத்து போராட்டத்தை நடத்தினா்.

கடந்த 2026 பிப்ரவரி 1- ஆம் தேதி சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக தொடா் போராட்டம் நடைபெற்றது.

6- ஆண்டு கால தொடா் போராட்டத்திற்குப் பிறகு நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலி தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு, மீள்குடி அமா்வு இழப்பீட்டுத் தொகை தலா 5 லட்சம் வீதம்

வழங்க 2163- நபா்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப். 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் 60 பயனாளிகளுக்கு ரூ.3 கோடிக்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

மீதமுள்ள பயனாளிகளுக்கு இதுவரை தொகை வழங்கப்படாததால் இப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நாகை மாவட்ட நிா்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனா். இந்தத் தொடா் போராட்டத்தின் மூலம் சுமாா் 20-க்கும் மேற்பட்ட நபா்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments