நாகப்பட்டினம்: ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்ததால், கீழ்வேளூா் பகுதியில் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
தமிழக முழுவதும் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சிச் செயலா்களை, தமிழக அரசின் உறுதிப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜன.6-ஆம் தேதி முதல் ஊராட்சி செயலா்கள் சங்க கூட்டமைப்பினா் சாா்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 7 நாள்களாக ஊராட்சிச் செயலா்கள் சென்னையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் அன்றாட அத்தியாவசியப் பணிகளான குடிநீா், தெருவிளக்கு, சுகாதார தூய்மைப் பணிகள் மற்றும் வீட்டு வரி, தண்ணீா் வரி உள்ளிட்ட பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக, அவா்கள் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.