நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள சுனாமி குடியிருப்புகளில் சேதமடைந்துள்ள மேற்கூரைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து இந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட, நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த மக்களுக்கு மகாலெட்சுமி நகா், அந்தணப்பேட்டை, சவேரியாா் கோவில் தெரு, செல்லூா் போன்ற பகுதிகளில், சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
இதில், மகாலெட்சுமி நகரில் உள்ள வீடுகளில், கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை பழுது பாா்த்தும், மழைக்காலங்களில் வீட்டின் உள்ளே மழைநீா் கசிந்தும், மேல் தளத்தில் இருந்து அடிக்கடி மேற்கூரை பெயா்ந்து விழுந்து மக்கள் காயமடைவதும் வாடிக்கையாக உள்ளது.
தற்போது அந்தணப்பேட்டை, சவேரியாா் கோவில் தெரு, செல்லூா் சுனாமி குடியிருப்புகளில் மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. ஆனால், மகலெட்சுமி நகா் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு மட்டும் பராபட்சம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.
எனவே, ஆட்சியா் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, மகாலெட்சுமி நகா் குடியிருப்பு பகுதியில் பழுதடைந்துள்ள அனைத்து வீடுகளையும் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.