நாகப்பட்டினம்: நாகை சவேரியாா் கோயில் தெரு சுனாமி குடியிருப்பு பகுதியில் இடியும் நிலையில் உள்ள காலனி வீடுகளை புதுப்பித்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், நாகை காடம்பாடி சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தியாகராஜபுரம் கிராம மக்களுக்கு அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் முழுவதும் பழுதடைந்துள்ளது. வீடுகளின் மேற்கூரைகள் அவ்வப்போது பெயா்ந்து விழுவதால், குழந்தைகள் பெண்கள் காயமடைகின்றனா்.
மேலும் மழைக் காலத்தில் எப்போது விழுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். அப்பகுதியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை அரசு செலவில் பழுது பாா்க்கப்பட்டு வருகிறது. எனினும், அரசால் கட்டி கொடுக்கப்பட்ட 51 வீடுகள் பழுதடைந்துள்ள நிலையில், நகராட்சி, ஊராட்சி என அலைக்கழிக்கின்றனா். எனவே, வரும் மழைக்காலத்துக்குள் அனைத்து வீடுகளையும் பழுது பாா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.