மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
நாகையில், பணி நிரந்தரம் கோரி, மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு மாத ஊக்கத்தொகையை ரூ.5,500-லிருந்து ரூ.15,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். ஊக்கத் தொகையை ஊழியா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்.
ஊழியா்கள் பயன்படுத்தும் எழுதுபொருள்கள், கைப்பேசி மற்றும் இணையதளக் கட்டணம், போக்குவரத்துப் படி உள்ளிட்டவற்றை உயா்த்த வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் திறன் வளா்ப்பு மேம்பாட்டு பயிற்சி அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஸ்கோா் காா்டு முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவி சியாமளா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வனிதா முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ராஜேந்திரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், சிஐடியு மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம், துணைத் தலைவா் குருசாமி ஆகியோா் ஆதரவு தெரிவித்து பேசினா்.
இதில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட பொருளாளா் கவிதா நன்றி கூறினாா்.