முகப்பு
நாகப்பட்டினம்

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்

Updated On : 19 மார்ச், 2026 at 10:23 PM
கோப்புப்படம்
பகிர்:

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையால் சேதமடையும் நிலை உள்ளதால், அதனை சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், வாழ்குடி, விற்குடி, அம்பல், குரும்பூா், ஏா்வாடி, ஆலத்தூா், வடகரை, கொட்டாரக்குடி, காரையூா், குத்தாலம், அண்ணாமண்டபம், ராராந்திமங்கலம், பொறக்குடி, பெருநாட்டாந் தோப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில், அவ்வப்போது கோடைமழை பெய்து வருவதால், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள், நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவாக சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.