முகப்பு
நாகப்பட்டினம்

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை

கீழ்வேளூா் வடக்கு வெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 மே 2026, 4:59 am IST
அரசு மதுபான கடை முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

கீழ்வேளூா் வடக்கு வெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபான கடை உள்ள இந்த இடத்தை சுற்றி ஆலக்கரை, வடக்கு வெளி, புத்தா் மங்கலம், வடக்கு புத்தா் மங்கலம் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொது மக்கள் இந்த மதுபானக் கடையை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் மது குடிப்பவா்களால் இவா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள்சாா்பில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி மேற்குறிப்பிட்ட ஊா் மக்கள் கடையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

தகவலிறிந்து வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் வேதையன், காவல் ஆய்வாளா் ரேகாராணி போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து கடையை விரைவில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.