சாலை மறியலில் ஈடுபட முயன்ற 33 பேர் கைது
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 33 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 33 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நீடாமங்கலத்தில் இரு தரப்பினர் முன்விரோதம் காரணமாக சாலை மறியலில் ஈடுபடப் போவதாகக் கூறி, துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். எனினும், சாலை மறியலுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாசிலை பகுதியில் ஒரத்தூர் சந்துரு தலைமையில் 9 பேர் ஒன்றாகக் கூடினர். அவர்களைக் கண்காணித்த போலீஸார், 9 பேரையும் கைதுசெய்து வேனில் ஏற்றி, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதேபோல், நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட முயன்ற 24 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.