காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தல்
காவிரி நீர் முறையாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டுமெனில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
காவிரி நீர் முறையாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டுமெனில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
கங்களாஞ்சேரி சா.வீ. ராமகிருஷ்ணன்: திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஆறுகள், வாய்க்கால்களை சரியான முறையில் தூர்வாரவில்லை. எனவே, நிகழாண்டு பட்ஜெட்டில் திருவாரூர் மாவட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறைக்கு பொக்லைன் இயந்திரங்களும், டிராக்டர், அறுவடைக் கருவிகளை ஒன்றியத்துக்கு இரண்டு வீதம் வாங்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன் : பாசன வாய்க்கால்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் மழைக்காலங்களில் மழைநீரை சேமிக்க முடியும். எனவே, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக விவசாயிகள் கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டூர் சண்முகசுந்தரம்: கோட்டூர் பகுதியில் 4 ஊராட்சிகளில் இன்னமும் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோட்டூர் - வடபாதிமங்கலம் இடையே உள்ள பொம்மை வாய்க்காலை தூர்வாரி, அங்கு பாலம் அமைக்க வேண்டும்.
நன்னிலம் சேதுராமன் : கடந்த 5 ஆண்டுகளாக முறையான சாகுபடி இல்லை. நிகழாண்டிலும் ஒருபோக சாகுபடி மட்டுமே நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும். அதுவும் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், இவைகளை அமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ஆறு, வாய்க்கால்களில் காணப்படும் செடிகள், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விளைநிலங்களுக்கு தண்ணீர் சீராக பாயும்.
திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமன்: திருவாரூர் மாவட்டத்தில் வறட்சி, வெள்ளத்தால் சாகுபடி பாதித்துள்ளது. ஆனால், பாரம்பரிய விதைகளை பயிரிட்ட இடங்களில், நன்றாக விளைந்து, மகசூலைத் தரும் சூழ்நிலையில் உள்ளன. எனவே, பாரம்பரிய விதைகளை பரவலாக விதைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கான நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.