திருவாரூரில் விளமல் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் நிகழ் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வசிக்கும் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம். கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையானப் பொருள்களை வாங்கவோ, விற்கவோ வேண்டுமெனில் திருவாரூருக்கு வரவேண்டியுள்ளது. அவ்வாறானப் பயணத்துக்கு பேருந்துகளே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.
கிராமப்புற மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டுக்காகவும், திருவாரூரில் தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையம் 1976- ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் ஒருபுறம் வழியாகத்தான் திருவாரூர் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
எனவே இருசக்கர வாகனங்களும், கார், ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களும் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தியே நகரத்துக்குள் செல்கின்றன. மேலும் நாகை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு தஞ்சை, திருச்சி பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் திருவாரூர் வழியை அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், திருவாரூர் பேருந்து நிலையம், பேருந்துகள், இதர வாகனங்கள், மக்கள் கூட்டம் என எப்போதும் பரபரப்பு மிகுந்ததாகவே காணப்படுகிறது.
திருவாரூர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு மக்கள் நெருக்கம் குறைவாகவே இருந்தது. இதனால், அப்போது அதிகமான பேருந்து வசதி தேவை என்ற நிலை ஏற்படவில்லை. ஆனால், திருவாரூர் தனி மாவட்டமாக மாற்றம் பெற்ற பிறகு, இம்மாவட்டத்துக்குள்பட்ட பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக திருவாரூருக்கு வரவேண்டியுள்ளதால் மக்கள் நெருக்கத்துடன் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு வரும் வாகனங்கள் திருவாரூர் பேருந்து நிலையத்தை கடந்தே செல்ல வேண்டும். இதன்காரணமாக இதர வாகனங்களின் பயன்பாடே திருவாரூர் பேருந்து நிலையத்தில் அதிகமாக உள்ளது. எனவே, இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருவாரூர் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து திருவாரூர் அருகே விளமல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, 2006-2011 திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, இதற்காக சுமார் 11 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதோடு, முதல் கட்டமாக 2011 ஜனவரியில் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணியானது, பின்னர் வந்த அதிமுக அரசால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் 72 வணிகக் கடைகள், கழிவறை வசதி, பயணிகள் காத்திருப்பு அறைகள், குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி உள்ளிட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்க வசதியாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய கட்டடப் பகுதிகளுக்கு பச்சை வர்ணம் பூசப்பட்டு, அந்த பணிகளும் நிறைவு பெற்று விட்டன. தற்போது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் செல்லும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் மெதுவாக நடந்துவந்ததைக் கண்டித்தும், பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேருந்து நிலையத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய பேருந்து நிலையப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
ஏறக்குறைய 90 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து நகராட்சி தரப்பினர் கூறுகையில், நகராட்சியின் பொதுநிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. எனவே, இம்மாத இறுதிக்குள், பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.