திருவாரூர்

பய‌ன்​பா‌ட்​டு‌க்கு வரா​த​தா‌ல் பாழா​கு‌ம் புதிய க‌ட்ட​ட‌ங்​க‌ள்

திருவாரூர் அருகே கோமலில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்  கடை,  சேவை மையக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வராததால்

சி.ராஜசேகரன்

திருவாரூர் அருகே கோமலில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்  கடை,  சேவை மையக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வராததால், அந்த கட்டடங்கள்  வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
  திருவாரூர் ஒன்றியம், திருக்காரவாசல் ஊராட்சிக்குள்பட்டது கோமல் கிராமம். இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயத் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2015-16 ஆம் ஆண்டு ரூ. 8.20 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் முடிவடைந்து ஓராண்டை கடந்து விட்டன. மேலும்,  கடையில் விற்கப்படும் பொருள்கள் குறித்தும் அட்டவணை வைத்துள்ளனர். ஆனால் கடை இன்னமும் திறக்கப்படாததால், அனைத்தும் வீணாகி வருகின்றன. 
மேலும், இதனருகிலேயே 2013-14 ஆம் ஆண்டு  ரூ.13.15 லட்சத்தில் கட்டப்பட்ட சேவை மையக் கட்டடம், புதிதாக அப்படியே உள்ளது. கிராமப்புறங்களில் திறக்கப்பட்ட நூலகக் கட்டடமும் இதன் அருகிலேயே உள்ளது. புதிய கட்டடங்கள் திறக்கப்படாததால், இந்த கட்டடங்களுக்குள் யாரும் நுழைந்து விடாதபடி கம்பி வேலி அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இதனால்,  இந்த கட்டடங்களுக்கு  அருகில்  உள்ள நூலகக் கட்டடத்தையும் பயன்படுத்த முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுதவிர இந்த வேலிப் பகுதிக்குள் மேல்நிலைத் தொட்டியும் உள்ளதால், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைத் தீர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
 மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள், மக்களுக்கு பயனளிக்காத நிலையில், கட்டடங்களைச் சுற்றி கட்டப்பட்ட கம்பி வேலி, அங்குள்ள மக்களுக்கு துணி  உலர்த்தும் கொடியாக பயன்படுகிறது.  அந்த  கட்டடங்களை  சுற்றி வசிப்போர்,  துணி உலர்த்தவும்,  பாத்திரங்களை காய வைக்கவும்   இந்த கம்பி வேலியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த  வேலிக்குள் கால்நடைகள் புகுந்து உலாவி வருகின்றன. இதனால் கட்டடப் பகுதிகள் எங்கும் கால்நடைக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. யாரும்  இந்த  கழிவுகளை  சுத்தப்படுத்தாததால்,  அப்பகுதியில்  துர்நாற்றம்  வீசுகிறது.  இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ரகுபதி கூறியது: கோமல் மற்றும் திருக்காரவாசலில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டும் பணிகள் முடிவடைந்து ஓராண்டை கடந்து விட்டன. இதேபோல் ரூ. 10 லட்சம் மதிப்பில்  சத்துணவுக் கூடம் கட்டப்பட்டு,  திறக்கப்படாததால் அதுவும் வீணாகிறது. இதுதவிர புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவில்லை. புதிதாக கட்டப்பட்டதால் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றப்படுவதில்லை. தற்போது, இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளும் பயன்படுத்தப்படாததால், இங்குள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலக கட்டடம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஒருவேளை புதிய கட்டடங்களைத் திறந்தால், அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடம் மாற்றலாம். கட்டடத்தை திறக்கக்கோரி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால், எப்போது புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து  அங்குள்ள இளைஞர்கள் கூறியது: புதிய  கட்டடங்கள் பாழாகி விடும் என்பதற்காக வேலி அமைத்து  பாதுகாத்து வருகின்றனர்.  இதனால்,  நூலகக் கட்டடமும் திறக்கப்படுவதில்லை.  செய்தித்தாள்கள்,  புத்தகங்கள் படிக்க விரும்புவோரும்,  மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கென தயார் செய்துவரும்  கிராமப்புற  இளைஞர்களுக்கும்  இந்த நூலகம்  மிகவும்  பயனுள்ளதாய்  இருந்தது.  தற்போது நூலகத்துக்குச் செல்ல வேண்டுமெனில்  15 கி.மீட்டர் தூரம்   உள்ள  திருவாரூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய  கட்டடங்களைத் திறப்பதோடு,  நூலகத்தை  உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
  இதுகுறித்து, திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறியது:  கோமலில் உள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளோம்.  இதேபோல், கூட்டுறவுத்துறை அலுவலர்களிடமும் பேசியுள்ளோம்.  ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய கட்டடங்களை திறக்கக் கோரி சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தோம். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கோமல் மட்டுமல்ல, திருக்காரவாசல், கூத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடங்கள் திறக்கப்படவில்லை.
மேலும் திருவாரூர் ஒன்றியத்தில் பல்வேறு மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்கள் திறக்கப்படாமல் பாழாகி வருகின்றன. திருவாரூர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி. இதனால், புதிய கட்டடங்களை திறந்தால்  அவரை கெளரவப்படுத்த  வேண்டியிருக்கும்  என்பதால்  இவ்வாறு,  புதிய கட்டடங்கள்  திறப்பு  தாமதப்படுகிறதோ  என்று  எண்ணத்  தோன்றுகிறது.   இதனால், மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்  என்பதை  கருத்தில் கொண்டு விரைவில்  புதிய கட்டடங்களை  பயன்பாட்டுக்குக்  கொண்டுவர வேண்டும்.  இல்லாவிட்டால்,  புதிய  கட்டடங்களை  போராட்டத்தின்  வாயிலாக  திறக்க  வேண்டி  வரும் என்றார்.
பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் நிலையில், பயன்பாட்டுக்கு வராத புதிய கட்டடங்கள் பாழாகி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மக்களின் சிரமங்களைக் குறைக்கவே நியாய விலைக் கடைகள் திறக்கப்படுகின்றன. ஆனால், அந்த கட்டடங்கள் திறக்கப்படாததால், மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மக்களின்
எதிர்பார்ப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT