கூட்டுறவு சங்க முதல் கட்ட தேர்தலில் முறைகேடு: திமுக புகார்
திருவாரூர் மாவட்டத்தில் முதல்கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனுக்களைப் பரிசீலிக்காமல், அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி
திருவாரூர் மாவட்டத்தில் முதல்கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனுக்களைப் பரிசீலிக்காமல், அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிப்பதாகக் கூறி இணைப் பதிவாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 44 கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக கடந்த 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதில் அதிமுகவினரின் வேட்புமனுவை மட்டும் பெற்ற அதிகாரிகள், மற்ற கட்சிகளின் வேட்பு மனுக்களைப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் 20-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் வரவில்லை. இதனால் திமுக சார்பில் தர்னா, முற்றுகை, உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில், அதிமுகவினர் போட்டியின்றி வெற்றி பெற்றதாகக் கூட்டுறவு சங்கங்களின் முன்பாக பெயர்ப் பட்டியலை அதிகாரிகள் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமையிலான அக்கட்சியினர் இணைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகக் கூறி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் கட்சி தலைமையிடம் ஆலோசனை நடத்தி, நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், ஒன்றியச் செயலாளர்கள் தேவா, ஜோதிராமன், பிரபாகரன், குமரேசன், தேவதாஸ், பிரகாஷ், விசு, அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.