தேசிய புலனாய்வு முகமையைக் கண்டித்து, திருவாரூரில் அனுமதியின்றி சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேசிய புலனாய்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும், என்.ஐ.ஏ. மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
எனினும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், தேசிய புலனாய்வு முகமையைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
அப்போது, அங்கு வந்த போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இதனால், இருதரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாவட்டத் தலைவர் எம். முஜிபுர் ரஹ்மான், மமக மாநில துணைப் பொதுச் செயலர் எம். யாகூப், மமக மாநில அமைப்புச் செயலர் எம். ஜெயினுல் ஆபிதீன், தமுமுக மாவட்டச் செயலர் எச். நவாஸ் உள்ளிட்ட 83 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.