திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தின் நீர் ஆதாரங்களான குளங்களை உரிய முறையில் பராமரித்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் 1761 -இல் சந்தானராமர் கோயில் கட்டப்பட்டது. கோயிலைக் கட்டிய மன்னர், கோயிலின் எதிரில் அழகிய திருக்குளம் ஒன்றை அமைத்து பக்தர்களும், ஊர் மக்களும் நீராட வசதி செய்து தந்தார். இந்த திருக்குளத்தில் ஆடிப்பூர தெப்ப உத்ஸவம், முன்னொரு காலத்தில் விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது. இந்த குளத்துக்கு வெண்ணாற்றிலிருந்து பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்தது. ஆனால், அண்மைக்காலமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமில்லாததால், வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதனால் குளத்துக்கு நீர்வரத்து தடைபட்டது. மழைநீர் மட்டுமே குளத்தில் தேங்கியிருந்ததால், அவசர காலத்துக்கு அதை பொதுமக்களில் சிலர் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
அதோடுமட்டுமல்லாமல், அறநிலையத்துறை கோயிலுக்குச் சொந்தமான இந்த குளம் சரிவர பராமரிப்பில்லாமல், குப்பைகள் கொட்டுமிடமாகவும் உள்ளது.
இந்த குளத்தை தூர்வாரி குளத்துக்கு நீர் வரும் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை வெட்டி ஆற்றில் நீர் வரும் காலங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாகும்.
இதேபோல், மருத்துவமனை எதிரில் யமுனாம்பாள் கோயில் அருகில் அமைந்துள்ள யமுனாம்பாள் குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இந்த குளத்தை சத்திர நிர்வாகம் சரிவர பராமரிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.
நீடாமங்கலம், தாலுகாவின் தலைநகராகும். தற்போது சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்கு இந்த இரு குளங்கள் மட்டுமன்றி, பழைய நீடாமங்கலம் சாலையில் உள்ள சேர்வராயர்குளமும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக குளம் இருந்த சுவடே இல்லாமல் போகும் நிலை உள்ளது.
இதேபோல், வருவாய் கணக்கில் இருந்து காணாமல்போன குளங்களும் உண்டு. செவிடன்காதில் ஊதிய சங்குபோல் இல்லாமல், நீடாமங்கலம் பகுதி மக்களும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.எஸ். குமார் கூறியது:
நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் குளம் நீர் நிரம்பி இருந்த காலத்தில் நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இக்குளத்துக்கு வெண்ணாற்றிலிருந்து நீர் வந்த பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், குளத்துக்கு ஆற்று நீர் வருவது நின்றுபோனது. இதேபோல், வடிகாலும் தூர்ந்துபோய்விட்டது. குளத்தை தூர்வாரி, நல்ல நீர் நிரப்பிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயனடைவர் என்றார்.
இதுகுறித்து கோயில் பக்தர்களிடம் விசாரித்தபோது, குளத்தில் நீர் நிரம்பி இருந்தால், பக்தர்கள் புனித நீராடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஆக்கிரமிப்பு வாய்க்காலை மீட்டெடுத்து, குளத்தில் ஆற்றுநீரை நிரப்புவதுடன், வடிகாலையும் சீரமைக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.