திருவாரூர்

நடவு மானியம்: எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள்..! நேரடி விதைப்புக்கு சாத்தியக்கூறு குறைவு

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால், நேரடி விதைப்புக்கான

சி.ராஜசேகரன்

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால், நேரடி விதைப்புக்கான சாத்தியக்கூறு குறைவாக இருப்பதால், நேரடி விதைப்புக்கு உழவு மானியம் என்பதை நடவுக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாவட்டம். உளுந்து, பயிறு, எள், பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்பட்டாலும், நெல் சாகுபடியே அதிகமாக நடைபெறுகிறது. சுமார் 1,52,100 ஹெக்டேர் பரப்பளவில், நெல் சாகுபடி நடைபெறுகிறது. 
டெல்டா பாசன சாகுபடிக்கு, ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திறக்கப்பட்டால், திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 36 ஆயிரம் முதல் 39 ஆயிரம் ஹெக்டேர் வரை குறுவை சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணை திறக்கப்படுவது தள்ளிப் போனால், 20 ஆயிரம் முதல் 28 ஆயிரம் ஹெக்டேர் என குறுவை சாகுபடியின் பரப்பளவு குறையும். அதன்படி, நிகழாண்டு திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) வசதி மூலமாக சாகுபடி நடைபெற்றுள்ளது. உரிய அளவு மழை பெய்யாதது, மேட்டூரில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஆற்றுப் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு சாத்தியமில்லாமல் போனது.
  இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 13- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதனால், சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பிருப்பதாக கருதி, விளைநிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக, குறுவை சாகுபடி குறையும் பட்சத்தில் சம்பா சாகுபடி அதிகமாக நடைபெறும். அந்த வகையில், 1,27,143 ஹெக்டேர் சம்பா சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 24,215 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நேரடி விதைப்பின் மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பொதுவாக, அக்டோபர் மாதத்துக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், சம்பா சாகுபடி எப்போதும் நேரடி விதைப்பின் மூலம் நீண்ட கால ரகங்களாக பயிர் செய்வது வழக்கம். அதாவது, ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ சம்பா விதைப்பு பணியை மேற்கொள்ளும்போது, 150 முதல் 160 நாள்கள் உடைய நீண்ட கால ரகங்கள் விதைப்பு செய்யப்படும். அப்போதுதான் அறுவடையானது ஜனவரிக்கு பிறகு வரும். இதனால், பருவமழையால் பயிர்களுக்கோ, மகசூலுக்கோ பெருமளவு  பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம், செப்டம்பர் 15- க்குப் பிறகு சம்பா விதைப்பு செய்தால், நேரடி விதைப்பு சாத்தியமில்லை என்பதுடன் குறுகிய கால ரகங்களை மட்டுமே விதைப்பு செய்ய முடியும் என்பது விவசாயிகளின் கணிப்பு.
நடவுக்கும் மானியம்: இதனிடையே, சம்பா சாகுபடி மேற்கொள்வதற்காக, உழவு மானியமாக ரூ. 600 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நேரடி விதைப்பு மூலம் சாகுபடி பணிகளுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. அதேநேரம் கடந்த சில நாள்களாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக, விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேரடி விதைப்புக்காக உழவு செய்து தயார் நிலையில் இருந்த வயல்களில், மண்ணானது இறுகிய நிலைக்கு மாறிவிட்டது. நேரடி விதைப்புக்கு மண்ணானது, புழுதிகளாக இருக்க வேண்டும் என்பதால், தற்போதுள்ள மண்ணில் நேரடி விதைப்புக்கு சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, நேரடி விதைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள உழவு மானியத்தை, நடவுக்கும் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:
மழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் நேரடி விதைப்பின் மூலம் சம்பா சாகுபடி செய்வதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே காணப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் வந்து சேரவில்லை. தற்போது ஆறு, வாய்க்கால்களின் தலைப்பை திறந்து தண்ணீர் விட்டால் கூட, தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்று சேர ஒரு வாரம் ஆகலாம். எனவே, சம்பா சாகுபடிக்கான விதைப்பு பணி 15 நாள்களுக்குப் பிறகு தீவிரமாக செய்ய முடியும். அப்போது, குறுகிய அல்லது நடுத்தர கால ரகங்களே அதிகமாகப் பயிரிட முடியும். எனவே, தெளி விதைக்கு (நேரடி விதைப்பு) அறிவிக்கப்பட்டுள்ள உழவு மானியத்தை, நடவுக்கும் வழங்க வேண்டும். அத்துடன், ரூ. 600 என்பது போதுமான தொகையல்ல. எனவே, இந்த மானியத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலர் 
வெ. சத்தியநாராயணன் தெரிவித்தது: பொதுவாக சம்பா சாகுபடிக்கு நீண்ட கால ரகங்களைப் பயிரிட ஆகஸ்ட் மாதமே சிறந்தது. நேரடி நெல் விதைப்பு செய்ய, புழுதி அடித்தபிறகு உள்ள வறண்ட, மலர்ந்த மண்ணில் விதை தெளிக்க வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் தண்ணீரில் விதையானது நன்கு வளரும். ஆனால், திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்து விட்டதால், நேரடி விதைப்பு செய்ய முடியாதபடி, மண்ணானது ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இப்போது விதை தெளித்தால், மக்கிப் போகும். அதேநேரம் இந்த மண் காய்ந்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் மத்திய கால ரகங்களை நேரடி விதைப்பின் மூலம் பயிரிடலாம். ஆனால், அதற்கு மண் காய்ந்து விதைத்தப் பிறகு தண்ணீர் தேவைப்படும். எனவே, தற்போது சிஆர் 1009, சிஆர் சப்-1, ஏடிடி 50 ஆகிய நீண்ட கால ரகங்களை நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் தண்ணீர் தேவைப்படும். எனவே, அதற்குள் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அண்மையில் பெய்த மழையால், நேரடி விதைப்பு செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு விரைவில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில், சம்பா சாகுபடிக்கான விவசாயப் பணிகளை தொடங்குவதற்காக தயார் நிலையில் விவசாயிகள் உள்ளனர். எது எப்படியாயினும், நடவுப் பணி மூலம் சாகுபடியே இனி செய்ய முடியும் என்பதால், உழவு மானியத்தை நடவுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேநேரம் ரூ. 600 என்பது மிகவும் குறைவான தொகை எனவே, இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT