திருவாரூர்

அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் திருவாசல்

திருவாரூர் அருகேயுள்ள திருவாசல் கிராமத்தின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.ராஜசேகரன்

திருவாரூர் அருகேயுள்ள திருவாசல் கிராமத்தின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிவலம் ஊராட்சிக்குள்பட்டது திருவாசல் கிராமம். திருவாரூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில், திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது. நகரப் பகுதிக்கு நெருக்கமாக காணப்பட்டாலும் அடிப்படை வசதிகளை பொருத்தவரை மிகவும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. இப்பகுதியில் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளர்களும், கூலித் தொழிலாளர்களுமே. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருவாசல் கிராமத்தைச் சுற்றிலும் விளைநிலங்கள் அதிகமாக இருந்தன. நகரத்தை ஒட்டிய பகுதி என்பதால், காலமாற்றத்தில் விளைநிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட்களாக மாறி, தற்போது ஆசிரியர் நகர், சுப்பிரமணியன் நகர், செம்மொழி நகர், லஷ்மி நகர்களாக உருவெடுத்துள்ளன.
ஆனால், இன்னமும் முன்னேற்றமில்லாத திருவாசல் கிராமம், காட்டாற்றின் கரையோரத்தில் காணப்படுகிறது. கொஞ்சம் பள்ளத்தில் உள்ள பகுதி என்பதால், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் திருவாசல் மிகவும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த நேரங்களில் இங்கு வசிக்கும் மக்கள், பாதுகாப்புக் கருதி சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்படுவர். பள்ளிக்கூடம், ஊராட்சி கட்டடம் என அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லாததால், இங்கு வசிக்கும் மக்களை புலிவலம் பகுதிக்கு அல்லது கூடூர் பகுதிக்கோ அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சிதிலமடைந்த சமுதாயக்கூடம்...
இந்த மக்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு, இங்கு சமுதாயக்கூடம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடத்தில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சமுதாயக்கூடத்தை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. தற்போது, இந்த சமுதாயக்கூடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்தும், உள்புறம் குப்பைகள் சேர்ந்தும், சிதிலமடைந்த நிலையிலும்  காணப்படுகிறது.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சமுதாயக்கூடம் இல்லாதது இப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மழை அதிகமாக பெய்யும்பட்சத்தில், தங்குவதற்கென்று பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லாததால், நிர்கதியாக நிற்க வேண்டிய நிலை வரும் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த வைதேகி கூறியது:
சில ஆண்டுகளாக மழை, வெள்ளம் அதிகம் இல்லாததால், கட்டடம் பாதிப்பு குறித்து தெரியவில்லை. கஜா புயல் வந்தபோது, மிகவும் சிரமம் ஏற்பட்டது. எங்களை தங்க வைக்க இடமில்லாமல், மாங்குடி ஊராட்சிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு வசிக்கும் மக்களே அதிகமாக இருந்ததால், நாங்கள் அங்கு தங்கவில்லை. இங்கே சாலைகளிலேயே கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம். ஆனால், கஜா புயலுக்கான நிவாரணம் கூட எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. தற்போது மழைக்காலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கழிப்பிட வசதி இல்லை....
அதேபோல், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. எனவே, பொது இடங்களையே பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. தற்போது, சுற்றிலும் நகர்களாக உருவெடுத்துள்ளதால், கழிப்பிட வசதிக்காக, சுமார் அரை கி.மீ. தூரம் வரை, விளை நிலங்களையும், காடுகளையும் தேடி நடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைக் காலங்களில், இப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறி விடுகிறது.
அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி, திறந்தவெளி மலம் கழித்தலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் செல்கையில், இப்பகுதியில் ஒரு வீட்டிலும் கழிப்பிட வசதி இல்லை என்பது கவலையளிப்பதாகவே உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி கலைச்செல்வி கூறியது: கழிப்பிட வசதி இல்லாததால், பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. புதிய நகர் உருவாகாத காலங்களில், எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், தற்போது காடுகளும் இல்லை. திறந்தவெளிகளும் இல்லை. எங்கு பார்த்தாலும் வீடுகளாக வந்து விட்டன. கடந்த ஆண்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி அனைத்து வீடுகளுக்கும் செய்து தருவதாகக் கூறி, ஆய்வு செய்து சென்றனர். ஆனால், அதன்பிறகு இன்னமும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி....
இப்பகுதியில் குழந்தைகளின் வசதிகளை கருத்தில்கொண்டு அங்கன்வாடி அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இடமில்லாத காரணத்தால், சமுதாயக்கூடத்தில் அங்கன்வாடி இயங்கி வந்தது. சமுதாயக்கூடம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடி செயல்பட இடமில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், கூடூர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. எனினும், அங்கு வாடகைக்குக் கூட இடம் தர மறுத்ததால், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு , இப்பகுதியிலேயே இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீட்டில் வாடகைக்கு இயங்கி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா கூறியது: தற்போது அங்கன்வாடியில் சுமார் 10 குழந்தைகளே வருகின்றன. வீடாக இருப்பதால், என்பதாலோ சிலர் தங்கள் குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். எனவே, பொதுவான இடத்தில் அங்கன்வாடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், இங்குள்ள பெண்கள், ஆண்கள் எல்லோரும் விவசாயம் நடைபெறும் நேரங்களில் வேலைக்குச் செல்லும்போது, இந்த அங்கன்வாடியில் குழந்தைகளை விட்டுச் சென்று விடுவர். எனவே, எங்கள் பகுதிக்கு அங்கன்வாடி கண்டிப்பாக தேவை என்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த தூண்டி கூறியது: இங்குள்ள குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான கால்வாயை சரி செய்து தர வேண்டும். பள்ளமான பகுதி என்பதால், அனைத்து இடங்களில் இருந்து தண்ணீர் வரும். அதேநேரம், தண்ணீர் அதிகமானால், தண்ணீர் வெளியேறுவதற்காக வடிகால் தனியாக இருந்தது. ஆனால், அனைத்துமே தூர்ந்து போய்விட்டன. தற்போது அதிகாரிகளிடம் முறையிட்டதில், தண்ணீர் வருவதற்கான குழாய் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வெளியேறுவதற்கான கால்வாய் இன்னமும் சரிசெய்யப்படவில்லை. ஒருவேளை மழைக்காலங்களில், அதிகமாக மழை பெய்தால், குளத்தில் தண்ணீர் நிரம்பி, வெளியேற வழியில்லாமல், குடியிருப்புக்குள் புக வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீர் வெளியேறுவதற்கான கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேர்தலின்போது, தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகக் கூறி ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள், அதன்பிறகு தங்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிடுவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நகரத்தை ஒட்டி இருந்தாலும், அடிப்படை வசதிகளை எதிர்நோக்கி காத்திருக்கும், திருவாசல் பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT