திருவாரூர்

அத்திக்கடை - அதங்குடியை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே இணைப்புப் பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர் வட்டம், அத்திக்கடை - அதங்குடி பகுதியை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே

சோ.தெஷ்ணாமூா்த்தி

கூத்தாநல்லூர் வட்டம், அத்திக்கடை - அதங்குடி பகுதியை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே இணைப்புப் பாலம் அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகேயுள்ளது அத்திக்கடை - அதங்குடி கிராமம். இந்த இரு கிராமங்களின் இடையே வெண்ணாறு செல்கிறது. இப்பகுதியில் வெண்ணாற்றின் குறுக்கே அத்திக்கடையையும், அதங்குடி உள் கிராமமான நல்லவலாம்பேத்தி கிராமத்தையும் இணைக்கும் வகையில் மூங்கில்களால் செய்யப்பட்ட தட்டிப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்தப் பாலத்தை அதங்குடி, களத்தூர், நல்லவலாம்பேத்தி, வெண்ணவாசல், வாழாச்சேரி மற்றும் நீடாமங்கலத்துக்குச் செல்ல குறுக்கு வழியாகவும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் மட்டுமன்றி, இப்பாலத்தின் வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்குச் செல்பவர்கள், வெளியூருக்குச் செல்பவர்கள் என ஏராளமானவர்கள் இந்த தட்டிப்பாலத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
இந்த தட்டிப்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப காலத்தில், அத்திக்கடை  ஜமாத் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதங்குடி மற்றும் வெண்ணவாசல் ஊராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தட்டிப்பாலம் கவனிப்பாரின்றி இருந்து வந்தது. இதனால், இந்த பாலம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி சென்று வந்தனர். தற்போது, வெண்ணாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், தட்டிப்பாலம் முழுவதுமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவனைக்குப் போக வேண்டுமானால் கூட, சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அத்திக்கடை - அதங்குடி கிராமங்களை இணைக்கும் வகையில் நிரந்தரமாக இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
இதுகுறித்து விவசாயி ரமேஷ் கூறியது: அத்திக்கடையையும், அதங்குடி உள் கிராமமான நல்லவலாம்பேத்தி கிராமத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தட்டிப்பாலம் வழியாகத்தான் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வந்தனர். அதேபோல், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் இந்த தட்டிப்பாலத்தைத்தான் பயன்படுத்தி வந்தனர். ஆரம்பத்தில், வெண்ணாற்றின் குறுக்கே அதங்குடி ஊராட்சி சார்பில் தட்டிப்பாலம் கட்டித்தரப்பட்டது. பின்னர், நல்லவலாம்பேத்தி கிராம மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, தட்டிப்பாலம் கட்டப்பட்டது. அடுத்து, வெண்ணவாசல் கிராம மக்கள், தொடர்ந்து, களத்தூர் கிராம மக்கள் என வசூல் செய்து மாறி மாறி கட்டினர். இப்படியே கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. மேலும், 100 மீட்டர் தூரத்தில் பாலம் இருக்கக் கூடாது எனச் சொல்கிறார்கள். ஆனால், வாழாச்சேரி பாலத்திலேயே 30 மீட்டர் தூரத்தில் ஒரு பாலமும், அதைத் தொடர்ந்து 75 மீட்டர் தூரத்தில் ஒரு பாலமும் உள்ளது. இந்த தட்டிப்பாலத்துக்கும், வாழாச்சேரி பாலத்துக்கும் இடையே 2 கி.மீ. தூரம் உள்ளது. அதேபோல், கொரடாச்சேரி வெண்ணவாசல் பாலத்துக்கும் இடையே 2 கி.மீ. தூரம் உள்ளது. அத்திக்கடையையும், அதங்குடி உள் கிராமமான நல்லவலாம்பேத்தி கிராமத்தையும் இணைக்கும் வகையில் இணைப்புப் பாலம் கட்டுவதற்கு மட்டும் ஏனோ மனம் வரவில்லை என்றார்.
இதுகுறித்து அதங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் கூறியது:
தட்டிப்பாலம் குறித்து கிராம மக்கள் மனுக்கள் அளித்துள்ளனர். அந்த மனுக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT