'மொழிக் கொள்கையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியை பின்பற்றுகிறது அதிமுக'
மொழிக் கொள்கையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் அதிமுக செயல்பட்டு வருகிறது. வேறு கட்சிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
மொழிக் கொள்கையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் அதிமுக செயல்பட்டு வருகிறது. வேறு கட்சிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது. வியாழக்கிழமை மட்டும் 62 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிந்தாலும். சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையும் பார்க்க வேண்டும். இறப்பு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது மிக குறைவாக உள்ளது.
ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இதனை எளிமை படுத்திடும் வகையில் ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தந்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு குழுவினை முதல்வர் அமைத்துள்ளார்.
பொதுமுடக்கம் ஆகஸ்ட் மாதமும் அமல்படுத்தப்பட்டிருப்பதால் தான், கரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அவசியப் பணிகளுக்கு மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு தடையின்றி இ-பாஸ் வழங்கிட வேண்டும் என முதல்வர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பகுதி நேர நியாவிலைக்கடை அமைக்க முடியாத இடங்களில் நடமாடும் நியாவிலைக் கடை செயல்பட முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மிக விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத்திற்கான அத்தியாவசிப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை. 3 மாதத்திற்கு தேவையான பொருள்கள் எப்போது இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.
மத்திய அரசு 32 ஆண்டுக்கு பிறகு, புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ளது. இது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மொழிக்கொள்கையில் திமுக வை, அதிமுக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்பிரச்னையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் முன்பு எடுத்த முடிவினை பின்பற்றி, இருமொழிக் கொள்கை தான் தீர்வு என அதிமுக கொள்கை முடிவினை எடுத்துள்ளது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை துணை இயக்குநர் மருத்துவர் விஜயகுமார், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.புண்ணியக்கோட்டி, கோட்டூர் ஒன்றியக்குழுத் தலைவர் மு.மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.