மனித முக விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி பூஜை
செதலபதியிலுள்ள மனித முக விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.
செதலபதியிலுள்ள மனித முக விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் வடக்கே திலதர்ப்பணபுரி என்கிற செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது.
மனிதமுக விநாயகர்: செதலபதியிலுள்ள முக்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே விநாயகர் மனித முகத்துடன் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இதுபற்றி புராண வரலாறு கூறுவதாவது, பார்வதி தேவி தன் உடலிலிருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி அதற்கு விக்னேஸ்வரன் என்று பெயரிட்டாள். ஒரு நாள் மனித முகத்துடன் இருந்த விக்னேஸ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்கு யாரையும் அனுமதிக்க வேண்டாமென கட்டளைப் பிறப்பித்தார். விக்னேஸ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்த சிவபெருமானையும், பார்வதிதேவியின் இருப்பிடத்திற்கு அனுமதிக்கவில்லை.
பார்வதியின் கணவர் என்று கூறியும் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் சிவனுடன் வந்த நந்தீஸ்வரர் விக்னேஸ்வரனுடன் சண்டையிட்டார். அவரையும் மற்ற பூத கணங்களையும் விரட்டியடித்தார் விக்னேஸ்வரன். கோபமடைந்த சிவபெருமான் விக்னேஸ்வரன் தலையை வெட்டிவிட்டார். விவரமறிந்து ஓடிவந்த பார்வதி, தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அழுதாள். உடனே சிவன் தன் பூதகணங்களிடம், வடக்கு நோக்கி யார் படுத்துகின்றனரோ அவரின் தலையைக் கொய்து, கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார்.
அப்போது யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன் தலையைப் பூதகணங்கள் கொய்து எடுத்து வந்தனர். சிவன் அந்த யானைத் தலையை குழந்தைக்குப் பொருத்தி உயிர்ப்பித்தார். அத்துடன் அந்த குழந்தையை தன் பூதகணங்களுக்குத் தலைவனாக்கி கணபதி என்று பெயர் வைத்தார். மேலும் பக்தர்கள் எந்த பூஜை செய்தாலும் கணபதியை வழிபட்டபின் துவங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தையும் அளித்தார். வி என்றால் வெற்றி, நாயகர் என்றால் தலைவர், இவ்வாறு விக்னேஸ்வரன், விநாயகர் என்ற வெற்றி நாயகன் ஆனார் என்று புராண வரலாறு கூறுகிறது.
இதேபோல மற்றொரு புராண வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை முகத்துடன் அட்டகாசம் செய்தான். அவனை வென்ற கணபதி, அவனது முகத்தைத் தனக்கு பொருத்தி கொண்டதாகவும் தகவல் உண்டு. விநாயகருக்கு யானைமுகம் கிடைப்பதற்கு முன் மனிதமுக விநாயகருக்குச் செதலபதியில் சன்னதி அமைக்கப்பட்டது. இந்த விநாயகருக்கு ஆதிவிநாயகர் என்ற திருநாமமும் உண்டு. ஆதிவிநாயகர், வலதுகாலைத் தொங்கவிட்டு, இடதுகாலை மடித்து வைத்து, இடதுகையை இடது காலின் மீது வைத்தும், வலதுகையைச் சற்றே சாய்த்து அபய முத்திரை காட்டிய படியும் காட்சி அளிக்கிறார்.
இவ்வாறு மனித முக விநாயகர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள திலதர்ப்பணபுரி என்கிற செதலபதியில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த மனித முக விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை காலையில், அபிஷேக பொருட்களான, மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி, இளநீர்,எலுமிச்சம் பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் விநாயக சதுர்த்தி சிறப்பு ஆராதனைப் பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்துகொண்டனர். கரோனாத் தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.