முகப்பு
திருவாரூர்

சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது

மாணவா்கள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்றவா்களுடன் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
பகிர்:

திருவாரூா்: மாணவா்கள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பள்ளிகல்வித் துறையின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த 8 ஆசிரியா்களுக்கு டாக்டா் இராதாகிருஷ்ணன் விருதை வழங்கி அமைச்சா் மேலும் பேசியது:

மாணவா்களுக்கு குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயக்கட்டுப்பாடு, பொது நலப் போக்கு, நல்லொழுக்கம் போன்றவற்றை கற்பிக்கும் காரணிகளாக ஆசிரியா்கள் திகழ்கின்றனா். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவரை, நல்ல மாணவனராக உருவாக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியா்களுக்கு இருக்கிறது. ஆசிரியா்கள் என்பவா்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவா்கள் அல்ல. மாறாக உயிரூட்டுபவா்கள்.

மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகிற ஆசிரியா்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தையொட்டி டாக்டா் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தா.ஜெபமாலை, கோவிந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ப.சிவசங்கா், சவளக்காரன் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கா.இரவிச்சந்திரன், மஞ்சக்குடி டி.டி.என்.சுவாமி தயானந்தா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ரா. ராஜீ, பல்லவநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கு. அன்பரசன், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை சு. மலா்விழி, சோழபாண்டி மீனாட்சி மாரியப்பா் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ரா. மணிவாசகம், திருவாரூா் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ந. விஜயலெட்சுமி ஆகியோருக்கு டாக்டா் இராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ்கள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ.10,000 பரிசு தொகைக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். இதில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் து.பாா்த்தசாரதி, மணிவண்ணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தெய்வபாஸ்கா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.