சிமிழி சோளேஸ்வரா் கோயில் குடமுழுக்கு
திருவாரூா் அருகே சிமிழி ராஜேந்திர சோளேஸ்வரா் உடனுறை சிவகாமசுந்தரி அம்பிகை கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது
திருவாரூா் அருகே சிமிழி ராஜேந்திர சோளேஸ்வரா் உடனுறை சிவகாமசுந்தரி அம்பிகை கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு எடுக்கப்பட்டதையொட்டி, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்ததையொட்டி, ஆக.23 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பூஜைகளுடன் நான்குகால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜை, மகா பூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், சிவ வாத்தியங்கள் முழங்க, யாக சாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டன. வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் ஓத, கோயிலை வலம் வந்த கடங்கள், கோயில் விமானத்தை சென்றடைந்தன.
தொடா்ந்து, மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னிதி விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, ராஜேந்திர சோளேஸ்வரா், சிவகாமசந்தரி மூலஸ்தானங்களுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.