முகப்பு
சிறப்புச் செய்திகள்

அதிமுக ஃபிரிட்ஜ்!  திமுக வாஷிங் மெஷினா?

தேர்தல் வாக்குறுதியாக அதிமுக விலையில்லா ஃபிரிட்ஜ் அறிவித்திருக்கும் நிலையில் திமுக என்ன செய்யப் போகிறது என்பது பற்றி...

Updated On : 24 மார்ச், 2026 at 2:48 PM
மதிப்புக்குரிய வாக்காளர்களே... - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

தேர்தலில் வென்று ஆட்சியமைந்தால் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக குளிர்பதனப் பெட்டி - ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்திருக்கிறது அதிமுக.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிட்ட அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இதை அறிவித்தார்.

ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஃபிரிட்ஜ் இலவசம் என்று எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்திருப்பதால், வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும் என்று ஒருவேளை திமுகவும் அறிவிக்குமோ? என்று கொஞ்சம் நகைச்சுவையாகவும் நிறையவே சீரியஸாகவும் மக்கள் பேசத்  தொடங்கியுள்ளனர்.

இலவசங்கள் தருவதாகத் தேர்தலில் அறிவிப்பதொன்றும் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழ்நாட்டின் இலவச அறிவிப்புகளைக் கேலி செய்த பிற மாநிலக் கட்சியினரேகூட பின்னர் அவற்றைப் பின்பற்றி வருவது அரசியலில் வரலாறு.

இலவச மின்சாரம், சத்துணவில் தொடங்கி, மகளிர் திருமண நிதியுதவி, தொட்டில் குழந்தைகள் என எவ்வளவோ. எல்லாம் திட்டங்கள்.

ஆனால், புதிய தடத்தில் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி, 2006 தேர்தலின்போது,   வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் ஏழை எளிய தாய்மார்களுக்கு இலவச கேஸ் அடுப்புகளும் வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார் திமுக தலைவர் மு. கருணாநிதி. வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு அவற்றை வழங்கவும் செய்தார் (கலைஞர் டிவி என்று புகழ்பெற்றது இந்த 14 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி!).

விடுவாரா, ஜெயலலிதா? 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கலர் டிவிக்குப் போட்டியாக, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார். கூடவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு  இலவசமாக லேப்டாப் போன்றவையும். வெற்றி பெற்றார், செயல்படுத்தவும் செய்தார்.

2021 தேர்தலில் வாக்குறுதியாகத் தெரிவிக்காவிட்டாலும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடனே நகர்ப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச (கட்டணமின்றிப்) பயணம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார், உடனடியாக நடைமுறைக்கும் வந்தது.

இடையே, 2023-ல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்து, தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 பணத்தை வங்கிக் கணக்கில் வழங்கத் தொடங்கியிருக்கிறது திமுக அரசு (கூட்டிக் கழித்து குடும்பத் தலைவிகளுக்கு அண்மையில் திடீரென ரூ. 5 ஆயிரமும் தந்திருக்கிறது). அல்லாமல் தற்போது புதுமைப் பெண் திட்டத்தில் உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படுகிறது.

2001-02-ல் தாழ்த்தப்பட்ட – பழங்குடியினப் பள்ளி மாணவர்களுக்கு என்று தொடங்கிப் படிப்படியாகப் பலருக்கும் விரிவுபடுத்தப்பட்டு ஆட்சிகள் மாறினாலும் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்!

ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள இரு கட்சிகளில் ஒன்றான அதிமுக இப்போது தனது தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றால் இலவச (பெயரை ஏற்கெனவே மாற்றியாகிவிட்டது, விலையில்லா) ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. கூடவே, நகர்ப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம் என அறிவித்துவிட்டது!

தேர்தல் அறிக்கையில் தி.மு.க. என்ன சொல்லப் போகிறது? வாஷிங் மெஷினாக இருக்குமா? ஆமாம், முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரெனக் கூறும் நடிகர் விஜய்யின் தவெக என்ன சொல்லும்?

summary

As the AIADMK has announced free fridges as an election promise, what is the DMK going to do...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.