ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.30 லட்சம் வெகுமதி: காவல்துறை அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருப்பது பற்றி...
ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் குறித்துத் தகவல் அளித்தால் ரூ. 30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் தச்சன் பகுதியில் புதன்கிழமை காணாமல் போன இரு சிறப்புக் காவல் அதிகாரிகள், குண்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டனர். அதிகாரிகளின் இரு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை, அவர்களைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இரு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு ரூ. 30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கிஷ்த்வார் காவல்துறை வெளியிட்டுள்ள சுவரொட்டிகளில், முகமது அமீன் (எ) ஜஹாங்கீர், ரியாஸ் அகமது (எ) ஹசாரி மற்றும் முதாசிர் உசேன் ஆகிய மூன்று உள்ளூர் பயங்கரவாதிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தேடப்படும் இந்த மூவரில், ஜஹாங்கீர் 'ஹிஸ்புல் முஜாஹிதீன்' அமைப்பின் முக்கியத் தளபதியாவார். இவர் 1990-களிலிருந்தே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறியும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.