ஜம்மு-காஷ்மீா்: இரு காவல் அதிகாரிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் தச்சன் பகுதியில் புதன்கிழமை காணாமல்போன இரு சிறப்பு காவல் அதிகாரிகள், குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின் தச்சன் பகுதியில் புதன்கிழமை காணாமல்போன இரு சிறப்பு காவல் அதிகாரிகள், குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டனா்.
அதிகாரிகளின் இரு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை, அவா்களை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சோதனைச் சாவடி மீது இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனா். இந்த நிலையில், கிஷ்த்வாா் மாவட்டத்தில் இரு காவல் அதிகாரிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று, ஆயுதங்களையும் பறித்துச் சென்றிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தச்சனில் உள்ள கியா் கிராமத்தில் உள்ளூா் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவில் பணியா்த்தப்பட்டிருந்த சிறப்பு காவல் அதிகாரிகளான பாபி சந்த் (57), ராஷ்பல் குமாா் (45) இருவரும் தங்களின் முகாமிலிருந்து, தா்னா-மா்வா பகுதியில் ரோந்துப் பணிக்காக புதன்கிழமை சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயினா். ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), மோப்ப நாய்களின் உதவியுடன் அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கிஷ்த்வாா் மாவட்டத்தில் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் அவா்கள் இருவரின் உடல்களும் வியாழக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டன.
அதிகாரிகளின் இரு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பயங்கரவாதிகள் பறித்துச் சென்றுள்ளனா். அவா்களின் உடல்களுக்கு அருகிலிருந்து, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கவசத்தைத் துளைக்கக்கூடிய வெடிமருந்துகளின் காலி உறைகள் கண்டெடுக்கப்பட்டன. பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.
இந்தத் தாக்குதல்களுக்கு யூனியன் பிரதேசத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, எதிா்க்கட்சியான பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, மாா்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
‘24 மணி நேரத்துக்குள் இரு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருப்பது தீவிர கவலைக்குரிய விஷயம். இந்தச் சம்பவங்கள், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதமற்ற பகுதியாக மாற்றிவிட்டதாக மத்திய பாஜக அரசு முன்வைக்கும் கூற்றுக்கு முரணாக உள்ளது’ என்று ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரிந்தா் செளதரி தெரிவித்தாா்.