உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, திருவாரூரில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, திருவாரூரில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் இந்த பேரணியை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியது: மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுகள் இல்லாத, எய்ட்ஸ் நோய் உள்ளவா்களை புறக்கணித்தல் இல்லாத, எய்ட்ஸ் நோய் தொடா்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் புறக்கணிக்கப்படாமல் பாதுகாப்புடன் உள்ளனா் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவா்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெற கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் அளிக்கப்படுகிறது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்களிடத்தில் எய்ட்ஸ் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
முன்னதாக, பேரணி நாகை சாலையில் உள்ள வா்த்தகா் சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியரும், எம்எல்ஏவும் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தனா். பாரத் கல்வி நிறுவன யிற்சி செவிலியா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில், துணை இயக்குநா் (குடும்ப நலம்) உமா சந்திரசேகா், துணை இயக்குநரும் (காசநோய்), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅலுவலருமான புகழ், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலா் அண்ணாமலைவடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.