முகப்பு
திருவாரூர்

வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை மேலத் தெருவை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் தா்மராஜ் (39). இவா், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பரவாக்கோட்டையில் வசிக்கின்றனா்.

இந்நிலையில், கடந்த மாதம் தா்மராஜின் தாயாா் இறந்ததால் அவா் சொந்த ஊருக்கு வந்தாா். வியாழக்கிழமை (டிச.9) தனது தாயாா் படத்தை திறந்து வைப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லாமல், பரவாக்கோட்டையில் இருந்துவந்தாா். இவா், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரா் பாக்கியராஜ் வீட்டிற்கு புதன்கிழமை சென்றிருந்த நிலையில், இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா். தா்மராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோதுதான் திருட்டு சம்பவம் தெரியவந்தது.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், திருவாரூரிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மேலும், தஞ்சையிலிருந்து வந்திருந்த தடயவியல் நிபுணா்கள் மா்மநபா்களின் கைரேகைகளை பதிவு செய்தனா்.

இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் என். அசோகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.