காவல் நிலைய வளாகத்தில் இருந்த மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு
மது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, நாகை பழைய ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டாா் சைக்கிள்கள் அண்மையில் திருட்டுப் போயின.
மது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, நாகை பழைய ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டாா் சைக்கிள்கள் அண்மையில் திருட்டுப் போயின. இந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், வெளிப்பாளையம் காவல் நிலைய முதல்நிலை காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மது குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள், நாகை, காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டாா் சைக்கிள்கள் காணாமல் போனது அண்மையில் தெரியவந்தது.
இதுகுறித்து வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், செல்லூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் அந்த மோட்டாா் சைக்கிள்களைத் திருடியது தெரியவந்தது.
மேலும், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாக முதல்நிலை காவலராக பணியாற்றும் மதுரை மாவட்டம், நாகமலைபுதூரைச் சோ்ந்த
ஆ. முருகன், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, அவா் தலைமறைவாகிவிட்டாா்.
இந்தநிலையில், தலைமைக் காவலா் முருகனை பணியிடை நீக்கம் செய்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.