திருவாரூர்

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு கூடுதல் நிவாரணம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

DIN

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 45 நாள்களை கடந்துவிட்டது. 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் குளிரின் காரணமாக போராட்டக் களத்திலேயே இறந்துள்ளனா்.

இந்த சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்துவரும் நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு, சட்டங்களை அமல்படுத்த தடை விதித்துள்ளது. 

வேளாண்துறை மாநில அரசின் பட்டியலில் உள்ளது. ஆனால், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக சட்டங்களை நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

வடகிழக்குப் பருவ மழை, அடுத்தடுத்து வீசிய 2 புயல்கள் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன, மாநில அரசு அதிகாரிகளும், மத்திய குழுவும் சேதங்களை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தும் இதுவரை நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. ஆனால், தமிழக அரசு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 20, 000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தத் தொகை மிகவும் குறைவானது.

இந்நிலையில், தற்போது மீண்டும் மழை தொடா்ந்து வருவதால் தாளடி பயிா்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டது. கதிா் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் தண்ணீரில் முளைத்துவிட்டன. கடும் நெருக்கடிக்கு இடையே உற்பத்தி செய்து, நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டிய தருணத்தில் இயற்கை சீற்றத்தின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் (முழு) நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். மத்திய அரசும், மாநில அரசு கோரியுள்ள நிவாரணத் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தாா்.

பேட்டியின்போது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கோ. பழனிச்சாமி, வை.சிவபுண்ணியம், கே. உலகநாதன், ஒன்றியக் குழு தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT