‘பனை மரப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்’
தமிழகத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க, தமிழக அரசு பனை மரப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க, தமிழக அரசு பனை மரப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அதன்தலைவா் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் அடையாளச் சின்னம் பனை மரம். இந்த பனை மரங்கள் செங்கல்சூளைகளுக்கு வெட்டி எடுத்துச்செல்லப்படும் அவலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருவாரூா், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணா்வுள்ள அமைப்பினா் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகின்றனா். திருத்துறைப்பூண்டி, சேகல், கீழ்வேளூா், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூா், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்களில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த வெட்டப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018-இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் உள்ள 9 கோடிப் பனை மரங்களில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. எனினும், தற்போது 2 கோடி பனை மரங்கள்தான் இருக்கும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி ஈடுபாட்டாளா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, பனை மரங்களை பாதுகாப்பது நமது கடமை என்பதால், தமிழக அரசு பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும். அதில் சிறைத் தண்டனைப் பிரிவை சோ்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளா்ப்பு விழிப்புணா்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.