முகப்பு
திருவாரூர்

பள்ளி இணையவழி வகுப்பில் ஆபாச படங்கள் அனுப்பியவர் கைது

மன்னார்குடியில் 9-ம் வகுப்பு இணையவழி வகுப்பில் அத்துமீறி நுழைந்து ஆபாச படங்களை அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பள்ளி இணையவழி வகுப்பில் அத்துமீறி நுழைந்து ஆபாச படங்களை அனுப்பியதாகக் கைது செய்யப்பட்ட மோகன் குமார். உடன் , திருவாரூர் சைபர் கிரைம் தனிப்படை போலீஸார்.
பகிர்:


மன்னார்குடியில் 9-ம் வகுப்பு இணையவழி வகுப்பில் அத்துமீறி நுழைந்து ஆபாச படங்களை அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய புறவழிச்சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது, கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறந்து செயல்பட அனுமதிக்கப்படாத நிலையில் இணைய வழியாக மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளியில் 9-ஆம் வகுப்புக்கும் இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பில் மாணவியின் பெயரில் அத்துமீறி உள்ளே நுழையும் மர்மநபர் ஒருவர் ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் ஆபாச படங்களையும், ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி வருவது குறித்து ஆசிரியைகள், மாணவிகள் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் சர்ச்சைக்குரிய அந்த செல்லிடப்பேசி எண்ணை நீக்கம் செய்து இணைப்பில் வருவதற்கு தடை விதித்தனர். மேலும், சென்ற மாதம் 29-ஆம் தேதி, பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து புகார் மனு அளித்தனர்.

இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஆர். ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து மர்மநபர் குறித்து விசாரித்து வந்தனர்.

இதில், இணையவழி வகுப்பில் அத்துமீறி நுழைந்து ஆபாச தகவல்களை படங்களை அனுப்பியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவிகுப்பம் முருகேசன் மகன் மோகன்குமார் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருவாரூரிலிருந்து சைபர் கிரைம் தனிப்படை பிரிவு போலீஸார் கிருஷ்ணகிரிக்கு விரைந்து சென்று மோகன்குமாரை வீட்டில் வைத்து, சனிக்கிழமை கைது செய்து திருவாரூர் அழைத்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது:

"பள்ளிகளில் நடைபெறும் இணைய வழி வகுப்புகளில் அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நிர்வாகங்கள் இணைய வழி வகுப்புகளை மிகத் தீவிரமான கண்காணிப்புடன் பாதுகாப்புடன் நடத்திட வேண்டும்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →