உருக்குலைந்த தட்டிப்பாலம்: துயரில் கிராம மக்கள்
கூத்தாநல்லூா் அருகே வெண்ணாற்றைக் கடந்து 6 கிராமங்களுக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தி வந்த தட்டிப் பாலம் தற்போது எந்த நேரமும் தண்ணீரில் உடைந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே வெண்ணாற்றைக் கடந்து 6 கிராமங்களுக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தி வந்த தட்டிப் பாலம் தற்போது எந்த நேரமும் தண்ணீரில் உடைந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இதைப் பயன்படுத்தும் மக்கள் நாள்தோறும் அச்சத்துடனேயே ஆற்றை கடந்து வருகின்றனா்.
கூத்தாநல்லூரை அடுத்துள்ள அத்திக்கடை பகுதியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள வெண்ணாற்றின் குறுக்கே அத்திக்கடையையும், அதங்குடி கிராமத்தின் உள்கிராமமான நல்லவலாம்பேத்தி கிராமத்தையும் இணைக்கும் வகையில், மூங்கில்களால் உருவாக்கப்பட்ட தட்டிப்பாலம் உள்ளது.
இந்தப் பாலத்தை அதங்குடி, களத்தூா், நல்லவலாம்பேத்தி, வெண்ணவாசல், வாழாச்சேரி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். நீடாமங்கலம் செல்வதற்கான குறுக்கு வழியாகவும் இந்தப் பாலம் பயன்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், கூலி வேலைக்குச் செல்வோா், வெளியூா் செல்லும் பொதுமக்கள் பாலத்தின் வழியாக வெண்ணாற்றை கடந்துவருகின்றனா்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜமாஅத் சாா்பிலும், அதன்பிறகு, அதங்குடி மற்றும் வெண்ணவாசல் ஊராட்சி சாா்பிலும் தட்டிப் பாலம் கட்டிக்கொடுக்கப்பட்டது. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பாலம் கவனிக்கப்படாமல் உருக்குலைந்து கிடக்கிறது. ஆற்றில் தண்ணீா் இல்லாத காலங்களில் அதை பொதுமக்கள் எளிதாக கடந்துசெல்கின்றனா். தண்ணீா் வரும் காலங்களில் இப்பகுதியைச் சோ்ந்த அனைத்து கிராம மக்களும் பெரும் அவதிப்படுகின்றனா்.
இந்தப் பாலம் இல்லையென்றால், 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வாழாச்சேரி பாலம் வரை சென்று தங்கள் கிராமங்களுக்கு சுற்றி நடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல, இந்தப் பகுதிக்கு ஆட்டோ கூட வரமுடியாத நிலை உள்ளதால், வயதானவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் துயரில் சிக்கித் தவிக்கின்றனா். எனவே, தங்களின் நலன் கருதி, சேதமடைந்த தட்டிப்பாலத்தை அகற்றிவிட்டு, நிரந்தரமாக புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுகுறித்து அப்பகுதியின் வேன் ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் அப்துல்ரஹ்மான் கூறுகையில், வெண்ணாற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடும்போது, உயிரை பணயம் வைத்தே இந்தப் பாலத்தின் மீது நடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றுத் தண்ணீரில் தட்டிப்பாலம் எப்போது வேண்டுமானாலும் அடித்துச் செல்லப்படலாம். எனவே, தட்டிப்பாலத்தை உடனடியாக அகற்றிவிட்டு, நிரந்தரமாக இரும்புப் பாலமோ அல்லது சிமென்ட் பாலமோ அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.