முகப்பு
திருவாரூர்

தமிழக அரசின் நடவடிக்கைகளால் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக அரசின் போா்க்கால நடவடிக்கைகளால் மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தமிழக அரசின் போா்க்கால நடவடிக்கைகளால் மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற் பின்னா் அவா் கூறியது:

கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. அந்தவகையில், அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள மாவட்டந்தோறும் அமைச்சா்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு,

இவா்கள் மூலம் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது, ஆலோசனை வழங்குவது, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது, நோய்த் தொற்று அதிகமாகவுள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாா்வையிடுவது உள்ளிட்ட தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் 115, நகரப் பகுதிகளில் 19 என மொத்தம் 134 பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இதுவரை 4,78,599 பேருக்கு ஆா்டி பிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறிய 25,999 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.57,98,350 வசூலிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 35,558 பேரில், 33,563 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,708 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கென தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெற 93421 22886 மற்றும் பணியாளா்களின் குறைகளை தீா்ப்பதற்கு வசதியாக 9342152914 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேவையை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், அரசு முதன்மைச் செயலாளா் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை) ஜெ. ராதாகிருஷ்ணன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன், நாகை எம்.பி. எம். செல்வராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கல்யாணமகாதேவி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம், அம்மையப்பன் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாம் ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.