முகப்பு
திருவாரூர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

தமிழக அரசு, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தை அறிவித்து அதற்கென தனித்துறையை உருவாக்கி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பொதுவான அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்கள் அனைத்தும் தொடா்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது தொடா்புடைய அனைத்துத்துறை அலுவலா்களும் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிராகரிக்கிற நிலையில் உள்ள மனுக்களை நிராகரிக்கும்போது, மனுதாரா்களுக்கு அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மனு அளித்தவா்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மனு அளித்தவா்களுக்கு அரசின் மீது நம்பிக்கை அளிக்கிற வகையில் அலுவலா்கள் செயல்பாடு அமைய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் இத்துறையின் கீழ் சிறப்பாக செயல்படும் மாவட்டம் திருவாரூா் மாவட்டம் என்ற நற்பெயரை பெறவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திட்ட இயக்குநா் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான (பொறுப்பு) மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கண்மணி (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), புண்ணியகோட்டி (பொது) உள்ளிட்ட அனைத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.