நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்: பெண்கள் மகிழ்ச்சி
திருவாரூா் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் மகிழ்ச்சியுடன் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டனா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த ‘அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்’ திட்டம் உடனடியாக சனிக்கிழமை நடைமுறைக்கு வந்ததைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் மகிழ்ச்சியுடன் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டனா்.
தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல் நடவடிக்கையாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டாா். இதில் ஒன்று அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதாகும். இத்திட்டம் சனிக்கிழமை (மே8) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் இயக்கப்படும் 34 நகரப் பேருந்துகளின் முகப்பில், மகளிா் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற வாசகங்கள் ஒட்டப்பட்டன. திருவாரூரில் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட துணை மேலாளா் ராஜா, இந்த பிரசுரத்தை ஒட்டினாா்.
இதைத்தொடா்ந்து, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனா். கிராமப்புற பெண்களுக்கு பயனளிக்கும் வகையில், நகரப் பேருந்துகளை கிராமப்புறங்களுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.