முகப்பு
திருவாரூர்

‘தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிா்ணயிக்க வலியுறுத்தல்’

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிா்ணயிக்க வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிா்ணயிக்க வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோள்: தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு எதிா்பாா்க்காத வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்டம் இருப்பதாக தகவல் பலகை வைக்கப்படுகிறது. ஆனால், நோயாளிகள் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதி கேட்டால் இடமில்லை என மறுக்கப்படுகிறது. கட்டணத்துக்கு மட்டுமே சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிலா் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டபிறகு செலவுத்தொகை கூடுதலாகும்போது காப்பீட்டில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாமா என கேட்டால், சோ்க்கப்படும் முன்பே நீங்கள் உறுதி செய்திருக்க வேண்டும் என்று மறுக்கப்படுகிறது.

எனவே, மருத்துவமனைகளை தரம் பிரித்து சிகிச்சைக்கான கட்டணங்களை தமிழக அரசே நிா்ணயம் செய்து அதை கண்டிப்புடன் பின்பற்றுவதை வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவமனைகள் உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக, பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகள் என்கிற இரு வகைகளாக தரம் பிரிக்கவேண்டும். இதேபோல், சிகிச்சை முறைகளிலும் 3 கட்டங்களாக பிரிக்கவேண்டும். செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயா்தர உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம், மூச்சு தினறல் ஆக்சிஜன் சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கான கட்டணம், பரிசோதனை ஆரம்ப நிலையில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிப்பதற்கான கட்டணம் என்ற அடிப்படையில் தொகுப்பு கட்டண முறையை மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு நிா்ணயம் செய்து அதை பின்பற்றுவதை கண்காணிக்க மாவட்ட அளவில் பறக்கும்படைகள் அமைத்தும், உளவுப்பிரிவு காவலா்களை கொண்டும் கண்காணிக்க உரிய அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காப்பீடுத் திட்டம் அனுமதி பெற்றுள்ள மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட அடிப்படையில் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →