முகப்பு
திருவாரூர்

‘தொழிலாளா்களுக்கு உறுதுணையாக உள்ளது தமிழக அரசு’

தொழிலாளா்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்தி, அவா்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது என்றாா் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தொழிலாளா்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்தி, அவா்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது என்றாா் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தின் சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ரூ. 3.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவா், மேலும் தெரிவித்தது:

தமிழக அரசு, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் அமைத்து நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கென தனி வாரியம் ஏற்படுத்தி, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் மற்றும் இதர 16 நலவாரியங்களைத் தொடக்கியது.

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நல வாரியம் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் 41,030 பதிவுபெற்ற உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களுக்கு திருமண உதவித்தொகை, பெண் தொழிலாளா்களுக்கு மகப்பேறுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், வீடு இல்லாத பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், வீடுகட்டுவதற்கு உதவித்தொகையாக ரூ. 4.50 லட்சம் வரைஅமைப்பு சாரா தொழிலாளா் நலவாரியம் மூலமாக வழங்கப்படுகிறது. அந்தவகையில், இன்று இயற்கை மரணம் அடைந்த உறுப்பினா்களின் வாரிசுகள் 6 பேருக்கு உதவித்தொகை, 31 பேருக்கு கல்வி உதவித்தொகை, 15 பேருக்கு ஓய்வூதியம், 3 பேருக்கு திருமண உதவித்தொகை, விபத்தின் காரணமாக மரணமடைந்த உறுப்பினரின் வாரிசுதாரா் ஒருவருக்கு விபத்து மரண உதவித்தொகை என மொத்தம் 56 பேருக்கு ரூ. 3.59 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. தமிழக அரசு, தொடா்ந்து நலத் திட்டங்களை செயல்படுத்தி, தொழிலாளா்களுக்கு உறுதுணையாக உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், தொழிலாளா் உதவி ஆணையா்கள் (அமலாக்கம்) பாஸ்கரன், (சமூக பாதுகாப்புத் திட்டம்) ம. ஸ்ரீதா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.