கூத்தாநல்லூர்: 72-வது தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் 72-ஆம் ஆண்டு தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் 72-ஆம் ஆண்டு தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸல் நபிகள் நாயகம் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கூத்தாநல்லூர் ஜஷ்ன மீலாத் சொஸைட்டியார்கள் சார்பில், 72 ஆம் ஆண்டு மீலாது விழா நடத்தப்பட்டது.
பெரிய தெருவில் அமைக்கப்பட்ட அல் அமீன் பந்தலில், தொடங்கிய ஸீரத் மாநாட்டில், எஸ்.எம்.ஹெச்.முஹம்மது ஃபரிதுத்தின் கிராஅத் ஓத, எம்.ஏ.ஷேக் முஜிபுர் ரஹ்மான் புகழ் கீதம் பாடினார். விழாவிற்கு, சேலம், நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.முஹம்மது அபூதாஹிர் தலைமை வகித்தார்.
ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் துணைத் தலைவர் என்.ஏ.எம்.அப்துல் அலிம் வரவேற்றார். தொடர்ந்து, குண நபியின் குடும்பவியல் என்ற தலைப்பில், சென்னை ஜாமிஆ அல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வரும், சென்னை அடையாறு பள்ளிவாயில் தலைமை இமாம் டாக்டர் எம்.சதீதுத்தீன் விவரித்தார்.
தொடர்ந்து, சர்வமும் வழங்கப்பட்ட சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் என்ற தலைப்பில், காயல்பட்டணம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஏ.கே.முஹம்மது அஸ்பர் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து, ரஹ்மத்தலில் ஆலமீன் தலைப்பில், காயல்பட்டணம் ஜாவியா அரபிக் கல்லூரி துணை முதல்வர் எஸ்.கே.எம்.ஹாஜா முஹ்யித்தீன் மற்றும் சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்மூத் தலைமை இமாம் ஏ.யு.அபூபக்கர் பேசினர்.
தொடர்ந்து, லெட்சுமாங்குடி மஸ்ஜித் பாத்திமா பீவி இமாம் ஜெ. எம்.பீ.முஹம்மது தாஹிர் அலி, அண்ணலாரின் ஆளுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிறைவாக, ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் செயலாளர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் நன்றி கூறினார்.
முன்னதாக, கூத்தாநல்லூர் நகர இளைஞர்கள் இசை வாத்தியம் முழங்க, நபிகள் நாயகம் குறித்த பாடல்களை பாடிய படி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். நபிகள் நாயகத்தின் புகழ் பாடி வருபவர்களை, ஆண்கள்,பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மாலையணிவித்து வரவேற்று இனிப்புகள் வழங்கினர். நகர் முழுக்க வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.