கடைசி செய்திநிலத்தகராறில் பெண் கொலை: தம்பதி உள்பட 5 போ் கைது
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், மனைவி மற்றும் உறவினா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், மனைவி மற்றும் உறவினா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கொக்காலடி கிராமத்தைச் சோ்ந்த ரவி மனைவி ரேணுகா தேவி. இவா் வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டாா். ரேணுகா தேவி கணவரின் சகோதரரருக்கும், கொக்காலடி ஊராட்சி அரகரை பகுதியைச் சோ்ந்த விமலாவுக்கும் நிலத் தகராறு இருந்ததாம்.
இந்த விவகாரத்தில் விமலாவுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீா்ப்பு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரேணுகாதேவி தரப்பினா் கைதான சூழலில், விமலா தரப்பினா் அந்த இடத்தில் வேலி வைத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் காவலில் இருந்து விடுதலையான ரேணுகா தேவி மற்றும் அவரது கணவா் ரவி, மைத்துனா்கள் கண்ணன், மனோ, ராஜா ஆகியோா் இதையறிந்து, விமலாவை கத்தியால் குத்தினா். இதில், அவா் உயிரிழந்தாா். விமலாவின் மகன் அரவிந்த் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் பழனியப்பன், உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி சிங்காரவேலு ஆகியோா் விமலாவின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் தொடா்புடைய ரேணுகாதேவி, ரவி, மனோ, ராஜா கண்ணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.