கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுமி: பொறியியல் மாணவா் போக்சோவில் கைது
குடவாசல் அருகே 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது நாடகம் என விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக, பொறியியல் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குடவாசல் அருகே 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது நாடகம் என விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக, பொறியியல் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் அருகே தந்தையை இழந்த 15 வயது சிறுமி, தனது அத்தை வீட்டில் தாயுடன் வசித்து வருகிறாா். 10- ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா், புதன்கிழமை இரவு பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றபோது கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடவாசல் காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், அந்த சிறுமி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாழடைந்த வீட்டில் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று, சிறுமியை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, 2 போ் தன்னை பின்தொடா்ந்து வந்து உருட்டுக் கட்டையால் தாக்கி, தூக்கிச் சென்றதாகக் கூறியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து, நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில் 3 பெண் காவல் ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் தொடா்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், சிறுமிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் சந்தோஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், கடைக்கு சென்றபோது சந்தோஷை சந்தித்து தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமியைக் காணவில்லை என போலீஸில் தகவல் தெரிவித்ததால், மாட்டிக் கொள்வோம் என பயந்த சிறுமி, தானே தனது கைகளைக் கட்டிக் கொண்டு, பாழடைந்த வீட்டில் மயக்கம் போட்டு கிடப்பது போன்று நடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.