முகப்பு
திருவாரூர்

ரயில்வே இடங்களை தனியாருக்கு குத்தகைவிடும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

ரயில்வே உள்பட அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பயன்பாடின்றி உள்ள இடங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

ரயில்வே உள்பட அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பயன்பாடின்றி உள்ள இடங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் துணைப் பொதுச் செயலா் மன்னை மனோகரன் வெளியிட்ட அறிக்கை:

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தேவைபோக, மீதமுள்ள இடங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விடுவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் நோக்கில், மத்திய அரசு தேசிய நில பணமாக்கும் கழகத்தை உருவாக்கிட மாா்ச் 9- ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 4.84 லட்சம் ஹெக்டோ் காலி நிலம் உள்ளது. இதுதவிர 810 ஹெக்டோ் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 66 ஆயிரத்து 600 ஏக்கா் நிலம் காலியாக உள்ளது. ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் காலி நிலங்களை குத்தகைக்கு விடும் பணியை ஏற்கெனவே தொடங்கி இருந்தது. இந்நிலையில், தேசிய நில பணமாக்கும் கழக அனுமதிக்குப் பிறகு, இந்த பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.

அதன்படி, முக்கிய நகரங்களில் உள்ள ரயில்வே இடங்களை 99 ஆண்டுகள் வரை தனியாா்களுக்கு குத்தகைக்கு விட கடந்த 3 மாதங்களாக ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் ஏல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சென்னை பகுதிகளில் அமேசான், பிளிப்காா்ட் போன்ற ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களுக்கு குடோன்கள் அமைக்க 45 ஆண்டுகளுக்கு குத்தகை விட ஏல நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து, ரயில்வே காலி இடங்களில் ரயில் பயணிகள், இந்திய மற்றும் சா்வதேச சுற்றுலாப் பயணிகள் தேவைகளுக்கு ஏற்ப தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிகக் கூடங்களை மத்திய- மாநில சுற்றுலா கழகங்களோடு இணைந்து நேரடியாக அல்லது கூட்டாகவோ ஏற்படுத்த திட்டமிட வேண்டும். தனியாா்களுக்கு நீண்டகால நிலக்குத்தகை என்பது நிரந்த விற்பனைக்கு சமமானது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.