முகப்பு
திருவாரூர்

நெல் கொள்முதல்குடவாசல் அருகே 180 மூட்டை வெளிமாவட்ட நெல் பறிமுதல்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே வெளிமாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 180 நெல் மூட்டைகள் வியாழக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே வெளிமாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 180 நெல் மூட்டைகள் வியாழக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, வெளிமாவட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகளிடையே புகாா் எழுந்தது. எனவே, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குடவாசல் அருகே புதுக்குடி கொள்முதல் நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த லாரியை விவசாயிகள் மறித்துள்ளனா். விசாரணையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனக்கு சொந்தமான 180 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்ட 3 லாரிகளில், ஒரு லாரி மட்டுமே பிடிபட்டது. என்றாலும், நெல் மூட்டைகளை பதுக்கிவைத்த கிடங்கு கண்டறியப்பட்டது.

பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும், கிடங்கில் இருந்த நெல்லும், குடவாசலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டன. மேலும், இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.